கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் போலி ரசீது குற்றச்சாட்டு

கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு காய்கறிகள் மற்றும் பொருள்கள் விற்பனை செய்ய வாகனங்களில் கொண்டு வருபவர்களுக்கு வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வசூல் செய்ய ஏலம் விடப்பட்டு, ஏலம் எடுத்து வந்தவர்கள் வசூலித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இதற்கான ஏலம் சில காரணங்களினால் விடப்படவில்லை என்பதால் நகராட்சி ஊழியர்கள் வாகனங்களுக்கான கட்டணத்தினை வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு போலியான ரசீது வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்கு முன்பு பல லட்ச ரூபாய்க்கு ஏலம் போனநிலையில் இன்றைக்கு நகராட்சிக்கு குறைவான வருவாய் மட்டும் கிடைப்பதாகவும், நகராட்சி ஊழியர்கள் போலியாக ரசீது அச்சடித்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறி மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை மனு அளித்தார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மனுவினை பெற்றுக்கொண்ட ஆணையாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்